சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் உள்ள கடல்சார் படிப்புகளுக்கான அமெட் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள நீர்நிலைகளில் பாம்பு, கொசு மற்றும் பூச்சிகள் அதிகரிப்பதை சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் தடுக்கும்படி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் தரப்பில் பல்கலைக்கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்று பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்ததாக கடந்த ஆண்டு இறுதியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு, அவற்றை அகற்றும்படி கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
செலவு வசூலிக்கப்படும்: அதன் அடிப்படையில் மே மாதம் நடைபெற்ற கூட்டத்தில், 'ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை' என பல்கலைக்கழகம் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்து விளக்கம் அளிக்கவில்லை என்பதால், ஓரிரு நாட்களில் 'ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் திருப்போரூர் ஒன்றியத்தின் மூலமாக ஆக்கிரமிப்பை அகற்றி, அதற்கான செலவுத் தொகையை பல்கலைக்கழகத்திடம் இருந்து வசூலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.
மனுத்தாக்கல்: அதன் அடிப்படையில் வண்டிப்பாதை, வாய்க்கால், கணக்கு மானியக் குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமெட் பல்கலைக்கழக (Academy of Maritime Education and Training University - AMET) மூத்த துணைத் தலைவர் எஸ்.கரிகாலன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி, 21 நாட்கள் அவகாசம் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் தடுக்காது: இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆக்கிரமிப்பு ஏதுமில்லை என்ற விளக்கத்தை அரசிடம் தாக்கல் செய்யாத நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், 'நீர்நிலை ஆக்கிரமிப்பின் மீதான அரசின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், ஆக்கிரமிப்பு என்று உறுதிசெய்யப்பட்டால் அதை அகற்ற எவ்வித தடையும் இல்லை' என திட்டவட்டமாக தெரிவித்தனர். எனவே, இது தொடர்பான விசாரணையில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இந்திய கடல்சார் பல்கலைக்கழக இயக்குநரின் பணி நீக்க உத்தரவு ரத்து