'தளபதி' விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், அமிர்தா, வர்ஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து விஜயை 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சென்னை ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் வீடுகளில், அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் சோதனை நடத்தினர். இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்ததையடுத்து, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு என்எல்சியின் 2ஆவது சுரங்கப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் விஜய்யிடம் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கு விஜய் முழுமையான தகவல் தராததால் அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை