சென்னை: கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ஷூ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்-3) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் கல்யாண், பாக்யராஜ், நடிகை லியாகத் அலிகான், விருமாண்டி, நக்கீரன் கோபால்,இமான் அண்ணாச்சி, பரணி, ஜாக்குவார் தங்கம், சஞ்சிதா ஷெட்டி, ஷீலா ராஜ்குமார், கோமல் மற்றும் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எழுத்தாளர் லியாகத் அலிகான், ‘தமிழ் சினிமாவில் மட்டும் கதாசிரியர்கள் மதிக்கப்படுவதில்லை. மற்ற மொழிகளில் கதாசிரியர்களை ஹீரோக்கள் தேடிச் செல்கின்றனர். இங்கு அப்படியில்லை’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், ‘நடிகைகள் தற்போது நன்றாக தமிழ் பேசுகிறார்கள். இது யோகி பாபு சீஸன். தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று கே.எஸ்.ரவிக்குமாரை சொல்லுவார்கள். இந்த நாளில் இத்தனை காட்சிகள் எடுக்க வேண்டும் என்றால் எப்படியாவது எடுத்து விடுவார். இத்தனை நாட்களில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்றால் முடித்து விடுவார். கொரியன், ஆங்கில படங்களில் சிறு வயது குழந்தையை கடத்திச் சென்று வியாபாரம் செய்வது போன்று நிறைய படங்கள் வந்துள்ளது. அதேபோல் மக்களுக்கு ஒரு மெசேஜ் கொடுக்கும் வகையில் இந்த படத்தின் கதை உள்ளது.
எழுத்தாளர் சங்கத்தில் நான் என்ன செய்தேன் என்பதற்கு அத்தாட்சி ஒன்று தான் உள்ளது. அது என்னுடைய மனசாட்சி அதை தவிர்த்து வேறு எதுவும் கிடையாது. 4 ஆண்டுகளாக தேர்தல் எதுவும் வைக்காமல் அவர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். நான் சங்கத்துக்கு என்ன செய்தேன் என இல்லாத ஒன்றை பட்டியல் போட்டு எதிரணியினர் இரண்டு நாட்களாக வெளியிட்டு வருகின்றனர். சர்க்கார் படத்தின் மீது வழக்கு போடப்பட்ட போது அந்த வழக்கிற்கு நான் நீதிமன்றம் வரை சென்று அந்த கதை ஆசிரியருக்கு வெற்றிபெற்று கொடுத்தேன். உடனே பத்திரிகையாளர்களை அழைத்து சொன்னேன்.
தேர்தல் நடத்தி முறையாக நான் வெற்றி பெற்று வந்து கொள்கிறேன் என்றேன். அப்பவே நான் ராஜினாமா செய்கிறேன் என்றேன். ஏனென்றால் எதிர் அணியில் இருந்தவர்கள் எல்லாம் நாங்க நிற்க வைத்தோம் என்று மறைமுகமாக பேசினர்.
நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி சங்கத்தை நடத்த முடியும் என எல்லாரும் ராஜினாமா செய்வதாக கூறினர். நீங்களே இருங்கள் என்று இப்போது எதிர் அணியில் இருப்பவர்கள் எல்லாம் கேட்டுக்கொண்டதால்தான் நான் இருந்தேன். அதன்பிறகு பல பிரச்சனைகள் வந்தபோதும் தேர்தல் நடத்த வேண்டும் என்றேன். ஆனால் இவர்கள் தான் பல்வேறு காரணங்களை சொல்லி நீங்களே இருங்கள் என்றனர்.
எதிர் அணியில் இருப்பார்கள் எல்லாம் ராஜினாமா கொடுத்து விட்டு என்னிடம் சொன்னதால் தான் நான் மறுபடியும் வந்து இருந்தேன். பாதியில் கூட நான் தேர்தல் வைக்க சொன்னேன். ஆனால் அவர்கள் தான் வேண்டாம் என்றார்கள். ஆனால் தற்போது நான் தான் தேர்தல் வேண்டாம் என்றும் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று சொன்னது போல தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். எழுத்தாளர்கள் எல்லாரையும் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள் அவர்களுக்கு தெரியும் யார் வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பூஜையுடன் தொடங்கிய நடிகர் பாபி சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'..!