சென்னை: அரசு பள்ளியில் தேங்கியுள்ள கழிவுநீரால் மாணவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் அடுத்த சிட்டலபாக்கம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்ப்பட்டுவருகிறது. இப்பள்ளியில் 85 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். பள்ளியின் பின்புறம் சிட்லப்பாக்கம் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சிட்லப்பாக்கம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், பள்ளியை ஒட்டியுள்ள கால்வாய் மூலம் ஏரிக்குச் செல்கிறது.
இடிந்து விழுந்த மசூதியைக் கட்ட ஒன்றிணைந்த இந்து மக்கள்
சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கழிவுநீரை ஏரியில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்திவருவதாக புகாரெழுந்தது. இதனால் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஏரியில் விட வேண்டும் என பொதுபணித் துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளியை ஒட்டியுள்ள கால்வாயை பொதுபணித் துறை அலுவலர்கள் அடைத்தனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், பள்ளியின் வளாகத்திற்குள் சென்று குளம்போல் தேங்கியுள்ளன.
அக்கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும், கொசுக்கள் உற்ப்பாத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என ஆறுமாத காலமாக சிட்லப்பாக்கம் பேருராட்சியிடமும், பரங்கிமலை கல்வி வட்டார அலுவலரிடமும் ஆசிரியர்களும், சமூக செயற்பாட்டாளர்களிடமும் புகாரளிக்கப்பட்டது.
டெல்லி தேர்தல்: 411 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
ஆனால் பரங்கிமலை கல்வி வட்டார அலுவலரும், பேரூராட்சி நிர்வாகமும் பள்ளியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை சுத்தம் செய்வதற்கும், கழிவு நீர் வராமல் தடுப்பதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசியர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மீண்டும் பத்து நாட்களாகவே கழிவுநீர் பள்ளி வளாகத்திற்குள் சென்று தேங்கி இருக்கின்றது.
இதனால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும், மாணவ - மாணவிகளும் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை விரைவில் சுத்தம் செய்ய வேண்டுமென மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரசு பள்ளியில் ஆயிரம் மாணவ - மாணவிகள் படித்து வந்ததாகவும், தற்போது 85 மாணவ - மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர் என சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால் மாணவ - மாணவிகள் சேர்க்கை குறைந்து அரசு பள்ளியை இழுத்து மூடும் நிலை ஏற்படும். இதனால் பள்ளிக் கல்வித் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.