சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட போஸ்டல் நகர், நெமிலிச்சேரி, பவானி நகர் உள்ளிட்டப் பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சாலைகளில் தேங்கும் கழிவுநீர் வீடுகளில் புகுந்து குடிநீர் தொட்டிகளில் கலந்துவிடுகிறது இதனால் குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அவர்கள், இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ராதாநகர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிட்லபாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து சாலை மறியல் போராட்டத்தை கைவிடச்செய்தனர். இதனிடையே பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்ட நகராட்சி பொறியாளர் அவற்றை விரைவில் சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!