சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பரலி நெல்லையப்பர் தெருவில் வெள்ள நீர் கால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சுத்தானந்த பாரதி தெருவில் இருந்து பரலி நெல்லையப்பர் தெரு, செங்கேணியம்மன் கோயில் தெரு வழியாக சென்று நல்லேரிக்கு போய் சேர வேண்டும். மேலும் இதில் ரயில்வே நிர்வாகமும் கழிவுநீரை விடுவதால் ஏரியில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாயில் இருந்த சாக்கடை கழிவுகளை முறையாக லாரிகள் மூலம் அகற்றாமல் அதனை அள்ளி சாலையில் பொறுப்பற்ற முறையில் மலைபோல் குவியல் குவியலாக சாலை முழுவதும் கொட்டி விட்டு சென்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.மேலும் இப்பகுதியில் மூன்று பள்ளிகள் இருப்பதால் பள்ளி மாணவர்கள் கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
சில மாணவர்கள் சாக்கடை சேற்றில் காலணி சிக்கியும் கடந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனால் ,சீருடை முழுவதும் சகதியோடு பள்ளிக்கு செல்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஆவடி சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நலம் விசாரித்த அமைச்சர்