சென்னை: ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளத்தில் பிரபல தனியார் உணவகம் ஒன்றிற்கு இன்று (அக்.10) சென்ற மகாராஷ்டிரா குடும்பத்தினர் லிஃப்டில் பயணித்தபோது திடீரென அந்த லிஃப்ட் பழுதானது. இதனால் மூன்று பெண்கள், ஒரு சிறுவன் உட்பட ஏழு பேர் லிஃப்டின் சிக்கிக்கொண்டனர்.
உடனே அவர்கள் இட்ட கூச்சலைக் கேட்ட அங்கிருந்த நுண்ணறிவு பிரிவைச்சேர்ந்த காவலர் குகன் என்பவர், சுமார் ஒருமணி நேரமாக இக்குடும்பத்தினர் சிக்கித்தவிப்பது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் பாண்டி பஜார் போலீசார் விரைந்தனர்.
அப்போது நுண்ணறிவுப்பிரிவு காவலர் குகன், ரோந்து வாகன காவலர் மாரிமுத்து உள்பட மூன்று பேர் லிஃப்டின் கதவுகளை இரும்புராடுகளால் உடைத்து லிஃப்டில் 1 மணி நேரமாக சிக்கிக்கொண்டிருந்த மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் ஒரு குழந்தை என ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சமயோசிதமாக செயல்பட்டு ஏழு பேரையும் மீட்ட காவலர்களுக்கு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். காவலர்களின் மெச்சத்தக்க பணியை உயர் அலுவலர்களும் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் திறந்து வைத்த மைதானத்தின் கழிவறைகளில் இருந்து ஊக்க மருந்துகள் கண்டெடுப்பு!