சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரபல ரவுடி ஹரிதாஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல்துறையினர் மூன்று தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி ஹரிதாஸை கொலை செய்யப்பட்டது தொடர்பாக அம்பத்துரைச் சேர்ந்த நெப்போலியன், கரிகாலன், மணிவண்ணன், செந்தில், மகிமைதாஸ் உள்ளிட்ட ஐந்து பேர், திருவள்ளூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், சேத்துப்பட்டைச் சேர்ந்த டார்வின் என மொத்தமாக பேரை கைது செய்துள்ளனர். பின்னர் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், ஹரிதாஸ் வீட்டின் அருகே உள்ள கோயிலை நிர்வகிப்பதிலும், கடை நடத்துவதிலும் ஒருவருக்கொருவர் போட்டி இருந்து வந்தது. மேலும் முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஹரிதாஸ், 2007 ஆம் ஆண்டு சசி என்பவரின் கொலை வழக்கிலும், கரிகாலன், மணி ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த வழக்கிலும் தொடர்புடையவர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.