தருமபுரி மாவட்டம் சின்னமானசாவடியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், இதை மீட்கக் கோரி கடந்த ஜூன் மாதம் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், எனவே ஓடை புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கலையரசி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் அதிகளவில் ஆக்கிரமிப்பு நடப்பதாக, நாளிதழ்களில் தினமும் செய்தி வருவதாகும், இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அலுவலர்கள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏன் அமைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் ஏன் அரசு இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் கேட்டனர். நிலத்தடி நீர் அதிகளவில் சுரண்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கில் உள்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்தனர்.
மேலும், ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 4 வார காலத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: காரணமில்லாமல் கைது செய்யக் கூடாது: டிஜிபி திரிபாதி!