தமிழ்நாட்டில் பாஜகவை மலர வைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பல முயற்சிகளை எடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட போது அதில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஓராண்டை நிறைவு செய்திருக்கும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நிகழ்வு ஒன்று நடைபெற இருக்கிறது. திமுகவில் பல ஆண்டுகளாக இருந்தும், தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (மே8) சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து கட்சியில் இணைவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து திமுக தொண்டர்கள் கூறுகையில் சில காலமாகவே திருச்சி சிவாவுக்கும் அவரது மகன் சூர்யாவுக்கும் பேச்சுவார்த்தை இல்லை எனவும் திமுகவில் தனக்கு முக்கிய பதவி கிடைக்காத கோபத்தில் சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
கோபத்தில் முடிவு எடுத்திருக்கும் சூர்யா , வி.பி துரைசாமி போன்று பாஜகவில் நீண்ட நாள்கள் நீடிப்பாரா அல்லது கு.க செல்வம் போன்று சிறிது காலம் தங்கி விட்டு தாய் கழகத்திற்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்...!
இதையும் படிங்க: பட்டனப் பிரவேசம் நடத்த அனுமதி- தருமபுரம் ஆதினம்