சென்னை: ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரு.விக. சாலையில் சர்தார் என்ற துரித உணவகம் இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ராயப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் அடிப்படையில் துரித உணவகத்தில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு முன்னா என்கிற முன்வர்மியான்(45) என்பவரிடம் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராயப்பேட்டை உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்காப்பர்(45) என்பவர் வீட்டில் சோதனை செய்து, இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து உணவகத்தில் வைத்து செல்போன் மூலம் விற்பனையில் ஈடுபட்டதாக ஒப்புகொண்டனர். இதையடுத்து உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது