சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தில் வேல்ஸ் நிர்வாகம் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக ஒரு சான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்ததாகவும்; அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழித்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் விஜயபாஸ்கர், வேல்ஸ் கல்லூரி நிறுவன குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள 5 இடங்களிலும், சேலத்தில் மூன்று இடங்களிலும், தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிவில் 18.37 லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஆவணங்கள், 1 பென்டிரைவ், 2 ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அதேபோல் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி முன்பு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் தெரு விளக்குகளை led விளக்குகளாக மாற்றுவதில் முறைகேடு செய்து, அதனால் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கம், ஒரு கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கிப்பெட்டக சாவிகள் ஆகியற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை