சென்னை: உலகில் வலிமைமிக்க கடற்படைகளில் ஒன்று இந்திய கடற்படை. ஆனால் யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இந்த கடற்படை அங்கே பணி செய்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (அக்., 31) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறக்கோரியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர் படுகொலை
தண்ணீரில் எப்படி எல்லை பார்க்க முடியும். அப்படியெனில் இந்திய கடற்படை ராணுவம் இந்திய கடல் எல்லையில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், தொடர்ச்சியாக நம் மீனவ சொந்தங்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்றார்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வருகிறார்கள் என்பதுதான் என்றவர், கடலில் இது இந்திய கடல் எல்லை, இலங்கை கடல் எல்லை என எப்போது பிரித்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.
"சொந்த நாட்டு குடிகளில் 850 பேருக்கு குறையாமல் உள்ள மீனவர்களை சுட்டு கொன்றுள்ளது. இதை தவிர படகை பறித்தது, அரசுடைமையாக்கியது, வலைகளை கிழித்தது உள்ளடக்கிய செயல்களையும் செய்தது" என்று கூறினார்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு
அணுக்கழிவு குறித்து பேசியபோது, ஒன்றிய அரசு அணுக்கழிவை கூடங்குளத்தில் வைக்கலாம் என கூறியது. இதே ஒன்றிய அரசு அணுக்கழிவை கோலார் சுரங்கத்தில் புதைக்கலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், ஒட்டு மொத்த கர்நாடாக மக்கள் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து போராட்டத்தை நடத்தி அந்த திட்டத்தை ஒழித்து விட்டனர்.
இதே போல வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு குறித்து பேசிய சீமான், தனி நபர்கள் காடுகளிலிருந்து இடம் வாங்கினால், அதற்கு அனுமதி வழங்கலாம் என புதிய சட்ட திருத்தம் கூறுகிறது. இந்த சட்ட திருத்தம் காடுகளை கடுமையாக அழிக்கும். எனவே இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தமிழர் அறத்தோடு சீமான் நடந்துகொள்ள வேண்டும் - இயக்குநர் கௌதமன்