சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் இதுகுறித்து நம்மிடம் பேசினார்.
அப்போது, "பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை இன்று (ஆகஸ்ட்.26) தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தற்போது பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை பன்னிரண்டாம் வகுப்பு வரை நீட்டித்து அறிவிக்க வேண்டும். அதேபோல் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை ஒன்பதாம் வகுப்பில் இருந்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வங்கிக் கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகை இருப்பாக இருக்க வேண்டுமென்ற உத்தரவுள்ளது. இதனால் மாணவர்கள் வங்கிக் கணக்கில் வைப்பு நிதி இல்லாத சமயங்களில் அபராதத் தொகையை செலுத்த நேரிடுகிறது.
எனவே வங்கி கணக்குகளை வைப்புத்தொகை ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனத்தை கால முறையில் மாற்றம் வேண்டும். தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அதிக அளவில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.
எனவே அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, கழிப்பிட வசதிகளை அதிகரித்து தரவேண்டும். மேலும் கழிப்பறையை தூய்மையாகப் பராமரிக்க தேவையான அளவு துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.