தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு சென்னை பிர்லா கோளரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாசினை கட்டுப்படுத்துவோம், தவிர்ப்போம் என்ற தலைப்பில் இந்தக் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக ஆஷ்ரம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் விண்வெளி குப்பைகளை அகற்றுவது குறித்து கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். இது பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்தது. விண்வெளி குப்பையும் தற்போது அச்சுறுத்தல் ஆகி வரும் சூழலில், காந்தம், வலை அமைப்பு பொருத்தப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி விண்வெளிக் கழிவுகளை சேகரிக்கலாம் அல்லது ஒரே ராக்கெட்டில் பல்வேறு செயற்கைக் கோள்களை அனுப்ப முயற்சிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கின்றனர் மாணவர்கள். மேலும் கடலில் விழும் ராக்கெட் உதிரி பாகங்களை நீர்மூழ்கி கப்பலில் காந்தம் பொருத்தி சேகரித்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் அதை உபயோகப்படுத்த முடியும் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிவியல் போட்டி மூலம் மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணர முடிகிறது என்றும் இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகள் தேசிய அறிவியல் நாளான பிப்ரவரி 28ஆம் தேதி வழங்கப்படுமென்றும் பெரியார் அறிவியல் மைய இளநிலை அறிவியலாளர் டேவிட் பொன்னுதுரை தெரிவித்தார்.
மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்குவார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியில் நெகிழி மறுசுழற்சி செய்தல், காற்று, நீர் மாசுபாடு குறைத்தல், நெகிழிக்கு மாற்றுப் பொருள் தயாரித்தல் உள்ளிட்ட மாணவர்களின் படைப்புகள் அவர்களின் ஆற்றல்மிகு அறிவியல் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் கற்பித்தல் முறையை பார்வையிட்ட மலேசிய குழுவினர்!