சென்னை: கேகே நகர் ராஜாமன்னார் சாலையைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் அஸ்வத் கமல்(9). கேகே நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று(மார்ச்.09) பள்ளி வகுப்பறையின் மேலே உள்ள மின்விசிறி சிறுவனின் தலையில் விழுந்தது. இதனையடுத்து பள்ளி முடிந்த பிறகு அஸ்வத் கமலை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பள்ளிக்கு சென்றார். அப்போது மகன் அஸ்வத் கமல் படித்து கொண்டிருந்த போது தன் தலையில் மின் விசிறி விழுந்ததாக தந்தை சசிகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியரிடம் சசிகுமார் கேட்டபோது எதுவும் ஆகவில்லை என அலட்சியமாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சசிகுமார் கேகே நகரிலுள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் தலையில் வலியிருந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டனர். இதையடுத்து சசிகுமார் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், "எனது மகனுக்கு இனி வரும் காலங்களில் ஏதேனும் தலையில் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் படியும்" புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேகேநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுக்கு முன்னதாக வேட்பாளர்களை பாதுகாக்க காங்கிரஸ் தீவிரம்