சென்னை: 2021-22 நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப்பணிகள் கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 3 கோடியே 70 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் கிடங்குகளில் இருந்து பெற்று பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் டெலிவரி
பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் தற்போது கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்கள் விரைவில் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை பள்ளிகளிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு
இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நோட்டு புத்தகம் ஆகியவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்படும் என கூறியுள்ளார்.
தொடக்கக்கல்வித்துறையில் மட்டும் பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்காக ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.