இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்) இருந்து வருகிறது. அதன்படி தற்போது 9ஆம், 10ஆம் வகுப்புகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் தாள், இரண்டாம் தாள் என மொழிப் பாடங்கள் உள்ளன. ஆனால் இரண்டு தாள்களும் ஒரே பாடமாகத்தான் காட்டப்படுகிறது. இது 11ஆம், 12ஆம் வகுப்புகளிலும் பின்பற்றப்படுகிறது.
11ஆம், 12ஆம் வகுப்புகளைப் பொறுத்தவரையில், இந்த 2 மொழிப்பாடங்களோடு 4 வேறு பாடங்கள் எடுக்கப்பட்டு மொத்தம் 6 பாடங்களுக்கு (தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள்) பொதுத்தேர்வு நடக்கிறது. இப்படி இருந்து வரும் நடைமுறையை மாற்றி, 2 மொழிப்பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்து அறிவிக்க தயாராகி வருகிறது.
இதில் தமிழ், ஆங்கிலம் இந்த இரண்டில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்வது என்றால் அவர்கள் எதைத் தேர்வு செய்வார்கள் என்பதை விட, எதைத் தேர்வு செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. ஆங்கில வழி எல்கேஜி வகுப்புகளை தமிழக அரசே தொடங்கிவிட்ட பிறகு, மாணவர்கள் என்ன, அவர்களின் பெற்றோர்களே ஆங்கிலத்தைத்தான் தேர்வு செய்வர் என்பது வெளிப்படை. இதன் மூலம் தமிழுக்குப் பாடை கட்டப்படும் என்பதும் வெளிப்படை.
இதைத்தான், சீர்திருத்தம் மற்றும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது என்ற பெயரில் செய்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. “தமிழ்-தமிழர்-தமிழ்நாடு” விழுமியத்தை அழித்தொழிக்கும் பாஜகவின் சதித்திட்டமே இதில் மறைந்திருப்பது. இந்த சதித் திட்டத்துக்கு துணைபோனவர்களே பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், பொதுத்தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் மற்றும் துணை இயக்குநர்கள்.
பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பை மறுப்பதாகச் சொல்லும் அத்துறைக்கான அமைச்சர் செங்கோட்டையன், ‘6பாடங்களும் நீடிக்கும்’ என்கிறாரே தவிர, மாணவர்களின் “பாட மொழித் தேர்வு” பற்றி வாயே திறக்கவில்லை. இதிலிருந்து, அவர் மீதும் நமக்கு சந்தேகம் வலுக்கிறது. தனக்குத் தெரியாமல்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சொல்வாரானல் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பொதுத்தேர்வுத் துறை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிவரும் என்பதை இதன் மூலம் சொல்லிக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.