சென்னை: கரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படாத மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்படாதவர்களிடம் 85 விழுக்காடு கல்விக்கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "2021-22ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூல் செய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். தனியார் பள்ளிகளுக்கு 2019-20ஆம் கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 85 விழுக்காடு கல்விக்கட்டணம் வசூல்செய்ய அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் 2021-22ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்றினால் இழப்பினை சந்திக்காத மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகளின் குழந்தைகள் உள்ளிட்டவர்களிடமிருந்து ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதன் அடிப்படையில் கட்டணங்களை வசூல் செய்யலாம். ஏற்கெனவே முதல் தவணைக் கட்டணம் வசூல் செய்திருந்தால் பிற கட்டணங்களை பிப்ரவரி 1ஆம் தேதிவரை தவணை அடிப்படையில் வசூல் செய்யலாம்.
கரோனா வைரஸ் தொற்றினால் பெற்றோர் பாதிக்கப்பட்டிருந்த அதற்குரிய கடிதத்தை நிர்வாகத்திற்கு அளித்தால் அவர்களிடமிருந்து 75 விழுக்காடு கட்டணங்களை ஆறு தவணைகளில் செலுத்தலாம்.
அவ்வாறு அனுமதி கேட்பவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி அளிக்க வேண்டும். இந்தக் கட்டணத்தை 2022 பிப்ரவரி 1ஆம் தேதி அல்லது அதற்கு முந்தைய தேதிகளில் வசூலித்துக் கொள்ளலாம்.
2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருப்பதையும், இடைநிற்றல் இல்லாமல் இருப்பதையும் கல்வித் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை பள்ளிகளை விட்டு வெளியேறினாலும் கல்வித் துறை அலுவலர்களே முழு பொறுப்பு ஆவார்கள்.
சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களின் கட்டண விபரங்களை நான்கு வாரங்களுக்குள் இணையதளத்தில் வெளியிடவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வசதிகள்'