சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழைப் பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அதன் காரணமாக தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்கள் அருகில் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளிகளில் தங்க வைப்பதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சென்னை மாநராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியின் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளையும், பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாகத் திறந்துவைக்க சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள கணினி உள்ளிட்ட மின்னனுக் கருவிகளை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், பணிகளை விரைந்து மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், "அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்களின் அறிவுரைப்படி பள்ளிகளைத் தலைமை ஆசிரியர்கள் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் கூறினார்.