சென்னை: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடியாக 50 விழுக்காடு மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நேரடியாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள், நோய் தொற்றால் ஆசிரியர்கள் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை
மேலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்த சாத்தியக் கூறுகளையும் அவர் கேட்டறிந்து, அதனை அறிக்கையாக தமிழ்நாடு அரசிடம் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வழங்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேரடி வகுப்புகளை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தொடங்குவது குறித்த முடிவுகளை தமிழ்நாடு அரசு எடுக்கவுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவருக்கு கரோனா - சக மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை