சென்னை: கர்நாடகாவில் 8ஆம் வகுப்பு கன்னடப்பாடப்புத்தகத்தில் இந்துத்துவ சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கர் குறித்த பாடம் இடம்பெற்றிருந்தைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கரை வரலாற்று ஆசிரியர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் வரலாற்று ஆசிரியர் என இடம்பெற்றுள்ளது. ’1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் கலகத்தை 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போரின் முன்னோடி என சவார்க்கர் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் முதலமைச்சரின் தற்போதைய செயலாளர் (நிலை ஒன்று) உதயச்சந்திரன் தலைமையில் பாடத்திட்டம் 2018ஆம் தயாரிக்கப்பட்டது. வல்லுநர் குழுவினால் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தினை தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் வல்லுநர் குழு சரி பார்த்தது.
மேலும் பள்ளிக்கல்வித்துறைக்குப் பாடப் புத்தகங்களை தயாரித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாடநூல் பணிகள் மற்றும் சேவைக்கழகம் புத்தகங்களை அச்சிடும். அதற்கு முன்னர் தேவைப்படும் திருத்தங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செய்து புதிய புத்தகத்தை அச்சிடுமாறு வழங்கும்.
ஆனால், 2019ஆம் ஆண்டில் எழுதப்பட்ட பாடப்புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர் சவார்க்கர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 2020ஆம் ஆண்டில் மறு பதிப்பு செய்தும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் பாடப்புத்தகத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பொழுதும் அதே நிலை தொடர்ந்து உள்ளது.
வரலாற்று ஆசிரியர் சவார்க்கர் குறித்து சில கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை குறித்த கருத்து பேசும்பொருளாகி இருக்கிறது.
இதையும் படிங்க: உற்சாகத்தில் ஈபிஎஸ்..! மீண்டும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டும் ஓபிஎஸ்..! அதிமுகவில் நடக்கப்போவது என்ன?