சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுதலையானர். பின்னர், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், குணமாகி தமிழ்நாடு திரும்பினார்.
இந்நிலையில், இவரது வருகை அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். இது, அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த சசிகலா திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தது அவருக்காக சுவரொட்டி ஒட்டிய தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், டிடிவி தினகரனுக்கும் ஏமாற்றமளித்தது.
இந்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா ஆன்மீகப் பாதையை நோக்கி பயணிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து (மார்ச்.15) தமிழ்நாட்டிலிருக்கும் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று (மார்ச் 13) தி. நகரில் உள்ள அகஸ்தியர் கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டுள்ளார். சந்தடியில்லாமல் வந்து வழிபாடு செய்த சசிகலாவை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.