சென்னை மாநகராட்சி மாமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது திமுக பிரமுகரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கினர். மேலும் ஜெயக்குமார் கார் டிரைவரை தாக்கியதாக, வண்ணாரப்பேட்டை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயக்குமார் தலைமையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றுக்காலத்தில் நோய்ப்பரவலை உண்டாக்கியது, கூட்டம் கூடியது உள்ளிட்ட ஐந்து பிரிவின்கீழ் ராயபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி ஜாமீன் வழங்கப்பட்டது.
அந்த வழக்கு சம்பந்தமாக இன்று முதல் 14 நாட்களுக்கு ஜெயக்குமார் ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை காவல் ஆய்வாளர் பூபாலன் முன்னிலையில் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து ஜெயக்குமார் பேசியதாவது, 'என்னுடைய பணிகளை முடக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்வேன்’ என்றார். மேலும் அடுத்த மாதம் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, 'அவர் சுற்றுப்பயணம் செய்வதால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அது அவருடைய விருப்பம். யார் வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செய்யலாம். அதனால் அதிமுகவிற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு - போலீஸ் காவல் கோரி டிஎஸ்பி மனு