சசிகலா சிறையில் இருந்து விடுதலையானது அதிமுக தலைமைக்கு என்ன உணர்வை ஏற்படுத்தியதோ, ஆனால் அக்கட்சியில் உள்ள சசிகலா விசுவாசிகளுக்கு தைரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கியிருக்கிறது. அதே மனநிலையில் இருக்கும் இன்னும் சிலரும், அதனை வெளிக்காட்டாமல் இருந்து வருகின்றனர். அதையும் மீறி சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அவர்களை கட்சித் தலைமை அதிரடியாக நீக்கியும் வருகிறது.
சசிகலாவை வரவேற்று தமிழகத்தில் முதன்முறையாக, திருநெல்வேலி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சுப்ரமணிய ராஜா, மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தார். இதையடுத்து கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதற்காக சுப்ரமணிய ராஜாவை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்தனர். அடுத்து, திருச்சியிலும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி என அதிமுகவினர் சசிகலாவிற்கு ஒட்டும் போஸ்டர்கள் மட்டும் குறையவில்லை.
சசிகலா தமிழகம் வரும்போது, இதேபோல் அவரை வரவேற்று பலர் போஸ்டர், கட் அவுட் வைக்கக்கூடும் என்பதால் உஷரான அதிமுக தலைமை, அதனை தடுக்கும் நடவடிக்கையாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்ததாலும், ஆட்சி முடிவுக்கு வர இருப்பதாலும், அமைதியாக இருந்த பல நிர்வாகிகள் தற்போது வெளிப்படையாகவே சசிகலாவை வரவேற்க தொடங்கியுள்ளனர். இன்று அதிமுகவில் இருக்கும் பலரும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதற்கொண்டு சசிகலாவால் பதவி பெற்றவர்கள் என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவராலுமே இதனை கட்டுப்படுத்த முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன், சசிகலா குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய ஒரு கருத்திற்காக அவரை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜெயலலிதாவுடன் சேர்ந்து தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலா மீது எப்போதும் எங்களுக்கு மதிப்பு உண்டு என்றார். ஏறக்குறைய இதேபோன்ற கருத்தையே அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியும், செல்லூர் ராஜுவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கூட்டப்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சசிகலா குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, உடல்நலம் தேறி பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி ,கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலரும் சசிகலாவை சந்திப்பார்கள் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.
இது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் நாம் கேட்டபோது, சசிகலாவிற்கு பயந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல இது என்றும், கட்சி விதிமுறைகளை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், சசிகலா குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் மீதும் நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு கருத்து கூற சிவசங்கரி மறுத்து விட்டார்.
தேர்தல் நெருங்குவதால் தொண்டர்களை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள, அதிமுக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், இருப்பினும் சசிகலாவின் தமிழக வருகைக்குப்பின் அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழும் என்கிறார். ஆட்சியில் இருந்தவரை கட்டுக்கோப்புடன் இருந்த தொண்டர்கள், டிடிவி. தினகரன் சொன்னதை போல் ஸ்லீப்பர் செல்களாக வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள் என அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா அடிக்கடி கூறும் ஒரு வாசகம், அதிமுகவினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பது. தளபதியாக இருந்தவரை ஜெயலலிதாவிடம் அதேக் கட்டுப்பாட்டுடன் அதிமுக தொண்டர்கள் இருந்தது உண்மைதான். ஆனால், அண்மை நாட்களாக அதிமுகவில் நடப்பதை பார்த்தால், ஜெயலலிதாவிற்கு பிறகான தளபதியை அவர்கள் தேடுவதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: 'சசிகலா வந்தபிறகே அவரது அரசியல் நிலைப்பாடு தெரியும்' - எல். முருகன்