நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக களமிறங்கி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மநீம கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர். மேலும் பலர் விலகுவதாகத் தகவல் வெளியாகியது.
யாரும் வெளியேறவில்லை என்றவர் விலகி விட்டார்
உடனே கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு ஐஏஎஸ், மக்கள் நீதி மய்யத்தை விட்டு மகேந்திரனைத் தவிர வேறு யாரும் வெளியேறவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது அவரே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், இந்த முடிவை தனிப்பட்ட காரணங்களுக்காக தான் எடுத்ததாகவும்; தன் மீது பாசம் காட்டிய கமலுக்கும் கட்சியினருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
ஒளி இழந்தாரா நட்சத்திர வேட்பாளர்
இவரைத் தொடர்ந்து மநீம சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கு நன்றி. சில காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை உங்களுடன் பகிர்வது எனது கடமை. எனது களப்பணி இன்னும் சிறப்பாக தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
மகேந்திரனுக்கும் கமலுக்கும் போட்டா போட்டி
முன்னதாக கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் "கட்சியில் குறிப்பிட்ட சிலரின் ஆலோசனைப்படி கமல் செயல்பட்டு வருகிறார். இதனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை" என்று தெரிவித்தார். அதற்கு பதிலடியாக அறிக்கை வெளியிட்ட கமல் ஹாசன் "களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாக கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் பரப்புரையின்போது சூறாவளி பரப்புரையை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, தற்போது சூறாவளி காற்றாக வீசிய உட்கட்சிப் பூசலால் முக்கிய நிர்வாகிகளை இழந்துவருகிறது.