சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த சுகாதார தூய்மைப் பணியாளர்கள் (Sanitation workers), R.C.H ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
பணி நிரந்தரம், மருத்துவ வசதி உள்பட தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும், வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற விடுப்புகளையும் வழங்க வேண்டும், கரோனாப் பணிக்கான சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 12 மணி நேர வேலை என்பதை ரத்து செய்து எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை நடைமுறைப் படுத்த வேண்டும், பணியிடங்களில் உரிய பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவதோடு, கவுரவமான முறையில் பணியாற்றும் வகையில் பணியிடச் சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு