கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து முடித்திருத்தம் செய்யக்கூடிய சலூன் கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு தடைவிதித்தது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஊரடங்கிற்கு முன்னதாக மாதம் 15,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டிவந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்தும் தொழிலாளர்கள், கடந்த இரண்டு மாதங்களாக எந்த வருவாயும் இல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முடித்திருத்தும் தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முடித்திருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினியால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாகத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் சங்கரசுப்பு, சென்னையில் பல்வேறு கடைகள் குறிப்பிட்ட விதிகளுக்குள்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளதால், சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான வழக்குரைஞர், சென்னையின் கள நிலவரங்களை ஆய்வுசெய்து சலூன் கடைகளைத் திறப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: நளினி முருகனை பேச அனுமதிக்க முடியாது - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!