முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் புரோமோட்டார்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளருமான சாதிக் பாட்ஷா 2011ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் அவர் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் தனக்கு மிரட்டல்கள் வருவதாக சாதிக் பாட்ஷாவின் மனைவி ரெஹனா பானு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதற்கிடையே, மார்ச் 16 ஆம் தேதி சாதிக் பாட்ஷாவின் எட்டாவது நினைவு நாளன்று பத்திரிகைகளில் அவரது குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், “கூடா நட்பு கேடாய் முடிந்தது” என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் தனது சகோதரருடன் காரில் அசோக் நகரிலுள்ள தனது நண்பர் இல்லத்துக்கு சென்று விட்டு துரைப்பாக்கம் இல்லத்திற்கு திரும்பிய போது, தனது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக ரெஹனா பானு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள ரெஹனா பானு, இன்று காவல் துறை ஆணையரிடம் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்துள்ளார்.