சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புதுறையிடம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி ரவீந்திரநாத் மற்றும் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை சொந்த ஆதாயத்திற்காக குறைவான விலைக்கு விற்று 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்படுத்தி உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த பிப். 2 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 10.5 ஏக்கர் நிலத்தை ஒரு சதுர அடி 12,500 ரூபாய்க்கு பாஷ்யம் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த இடத்தில் அந்த நிறுவனம் ரூ.1575 கோடி செலவில் காம்ப்ளக்ஸ் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட உள்ளதாகவும், அதனால் 7,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டிருந்தது.
முறைகேடு
அரசு விதிமுறைகளை மீறி பாஷ்யம் நிறுவனம் அந்த இடத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருவதாகவும், அதற்கான விளம்பரத்தையும் அளித்து வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான நிலத்தை வெளிப்படையாக, நேர்மையாக பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் விற்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், அதனை மீறி பாஷ்யம் நிறுவனத்திற்கு அதிமுக அரசு முறைகேடாக அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.500 கோடி இழப்பு
மத்திய சென்னையின் கோயம்பேட்டில் ஒரு சதுர அடி விலையின் மதிப்பு 25,000 ரூபாய் வரை போகும் நிலையில் ரூ.12,500 என மலிவான விலைக்கு வழங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் அரசுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் தேர்தல் விதிமுறைகளுக்கு முன்னதாக அவசரமாக அரசாணை வழங்கி இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறைந்த பட்சமாக சி.எம்.டி.ஏவிடம் இருந்து அனுமதி பெற 4 மாதங்கள் ஆகின்ற நிலையில் உடனடியாக இந்த நிலத்திற்கு அனுமதி வழங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வருவாய் துறை அமைச்சர் உதயக்குமார், ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை தொடக்கம்
இந்த புகாரின் அடிப்படையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறை அளித்த சம்மனின் அடிப்படையில் கடந்த வாரம் ஆஜராகி முறைகேடு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்து பதிலளித்து வந்தார்.
இந்நிலையில், அவர் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். குறிப்பாக நிலத்திற்கான அனுமதி வழங்கிய சி.எம்.டி.ஏ அலுவலர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், பாஷ்யம் நிறுவனம் குடியிருப்பு கட்டுவதாகக் குற்றஞ்சாட்டபடுவதால் நேரில் சென்று ஆய்வு நடத்தவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி செய்த மோசடிக்கு ஆதாரங்கள் உள்ளன - உயர் நீதிமன்றத்தில் காவல் துறை பதில்