நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூா், மலேசியா என வெவ்வேறு வெளிநாடு விமானங்களிலிருந்து வந்த நான்கு பேர் தங்களுடன் 23 கிலோ தங்கத்துடன், ரூ.23 லட்சம் மதிப்புடைய ட்ரோன் (Drone) கேமராக்களையும் சென்னைக்கு கடத்த முயன்றுள்ளனர்.
விமான நிலையத்தில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில், அவர்கள் பிடிபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த தங்கம், ட்ரோன் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பின் நடத்திய விசாரணையில், இவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கடத்திவந்த தங்கம் ரூ.7.83 கோடியும் - ட்ரோன் கேமராக்களின் விலை ரூ.23 லட்சமும் இருக்கக்கூடும் என்றும், மேலும் இந்தக் கடத்தல் ஆசாமிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சுங்கத் துறை அலுவலர் ஒருவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடத்தலில் அரசு அலுவலர் உட்பட இன்னும் முக்கியப் புள்ளிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களை கண்டுபிடிக்கும் வரை தற்போது கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிட மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மறுத்துள்ளனர்.