சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், குடவாசலில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு நவீன சேமிப்புக் கிடங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து, 21 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் கூடுதல் தளங்கள், கூட்டுறவு வங்கி கிளை அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம்:
பஞ்செட்டி கிராமத்தில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்புக் கிடங்கு, வேலூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தலா 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புக் கிடங்குகள், குகையநல்லூர் கிராமத்தில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புக் கிடங்குகள்.
திருப்பத்தூர் மாவட்டம்:
குனிச்சி கிராமத்தில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புக் கிடங்குகள், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் கிராமத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்புக் கிடங்கு.
தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவுகொண்ட 3 சேமிப்புக் கிடங்குகள்; கூட்டுறவுத் துறை சார்பில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புவனகிரி கிளைக்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வங்கி கிளை அலுவலகக் கட்டடம், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஒண்டிப்புதூர் புதிய கிளைக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வங்கி கிளை அலுவலகக் கட்டடம்.
சென்னை மாவட்டம்:
பூங்கா நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை (வடக்கு) மற்றும் சென்னை (தெற்கு) ஆகிய அலுவலகங்கள் அனைத்தும் ஒரே கட்டடத்தில் செயல்படுவதால் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 6024.60 சதுர அடி பரப்பளவில், 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 ஆவது தளத்தின் பகுதிக் கட்டடம்.
மேலும், 4ஆவது தளம் ஆகிய கூடுதல் கட்டடங்கள், என மொத்தம் 67 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் முனைவர் நீதியரசர் தமிழ்வாணன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) சுப்பிரமணியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுக பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளது'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி