சென்னை : தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவோரிடமிருந்து, அப்பொருள்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி முதல் 15 மண்டலங்களிலும், மொத்தம் 57 ஆயிரத்து 693 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 22 ஆயிரத்து 941 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக 42 லட்சத்து 42 ஆயிரத்து 601 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 7 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 394 பேருக்கு கரோனா சிகிச்சை