இந்து சமய அறநிலையத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கடந்த 08.10.2021 அன்று இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்.
அதன்படி 5 ஆயிரத்து 720 திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு, 1,492 திருக்கோயில்கள் மூலமாக இதுவரை ரூபாய் 21 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை 10 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 21 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வாடகை நிலுவைத் தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கணினி மூலம் வாடகை /குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர் /வாடகைதாரர்கள் வழக்கம் போல் திருக்கோயில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதினை பெற்றுக் கொள்ளலாம்.
வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோயில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய திருக்கோயில்களில் அமைந்துள்ள பொது வசூல் மையத்தில் கேட்புத் தொகையினை செலுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அறநிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏதுவாகும்.
வசூல் முறையாக நடக்கிறதா என்பதனைத் தொடர்ந்து கண்காணித்து, வருமானம் ஈட்டாத சொத்துக்களை ஏலத்துக்கு /குத்தகைக்கு கொண்டு வந்து, அறநிறுவனங்களுக்கான வருவாயினைப் பெருக்கிட இயலும். முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவைத் தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்டா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவிஷீல்டு - சர்வதேச ஆய்வில் தகவல்