தமிழ்நாட்டில் கரோனா தொற்று மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கி இன்று வரையிலும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக சென்னையில் கடந்த மாதம் வரை அதிதீவிரமாக பரவி வந்தது. தற்போது ஓரளவு குறைந்துள்ளது. மேலும், இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மற்றும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில், முக்கியமானவை முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும். அது மட்டுமின்றி பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து மாநகராட்சி அலுவலர்கள் தினமும் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, ஊரடங்கு தொடங்கியது முதல் 15 மண்டலங்களிலும் நேற்று (செப்.21) வரை மொத்தம் 2 கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 662 ரூபாய் அபராதமாக மாநகராட்சி வசூல் செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3 லட்சத்து 97 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் கரோனாவின் ஹாட்ஸ்பாட் என சொல்லப்பட்ட ராயபுரத்தில் 44 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 27 லட்சத்து 19 ஆயிரத்து 100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டாட்சியர் மூலமாக 13 லட்சத்து 24 ஆயிரத்து 250 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.