சென்னை: வட சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்துவருகிறது. இவர் காவல் துறையினர் பிடியில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்துவந்தார்.
ரவுடி கைது
இந்நிலையில் பாலாஜியை கடந்த ஜூன் 12ஆம் தேதி விழுப்புரம் அருகே காவல் துறையினர் கைதுசெய்தனர். காவல் துறையினர் கைதுசெய்தபோது காக்கா தோப்பு பாலாஜி காவல் துறையினரைத் தாக்கி தப்பிக்க நினைத்து குதித்தபோது அவரின் கை, காலில் உள்ள எலும்புகள் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் பாலாஜியை கைதுசெய்த காவல் துறையினர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக ஜூன் 13ஆம் தேதி அனுமதித்தனர்.
இந்த நிலையில் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாலாஜியின் தாய் கண்மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் காக்கா தோப்பு பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல்செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கை தாக்கல்
அதில் பாலாஜிக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களுக்காகவும், கரோனா தொற்று சிகிச்சைக்காக 10 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்ததாகவும் பின்னர் ஜூன் 23ஆம் தேதி மருத்துவ சிகிச்சை முடிந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், காவல் துறை தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், பாலாஜிக்கு எலும்பு முறிவு இல்லை எனவும் அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.