சென்னை: கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி வாசலில் பேருந்துகளில் இருந்து இறங்கி வந்த இருதரப்பு மாணவர்கள் திடீரென மோதலில் ஈடுபட்டனர். அங்கு நின்றிருந்த ரோந்து காவல் துறையினர் ஓடி வந்ததும் மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து காவல் துறையினர் பச்சையப்பன் கல்லூரியின் பின்புற வாசல் அருகில் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்த பை ஒன்றை மீட்டு சோதனை செய்தனர். அதில் 8 கத்திகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் சந்தேகத்தின்பேரில் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இச்சம்பவத்திற்கு முன்பு பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் சுமார் 20 நபர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னல் அருகில் கத்தி மற்றும் கல்லால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ