சென்னை: 32ஆவது சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனையொட்டி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்ட மணல் சிற்பத்தைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் திரைப்படப் பாடகர் கானா பாலா பாடிய பாடலை வெளியிட்டார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், “தமிழ்நாடு அரசு, போக்குவரத்து காவல் துறை ஆகியோரின் உதவியால் 2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டு 30 விழுக்காடு விபத்து குறைந்துள்ளது. அதன் மூலம் 380 மனித உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுத்துள்ளோம். சாலை விபத்துகளைக் குறைக்க இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உதவும்” எனத் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் முழுமையாக சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றினால் சாலை விபத்துகள் இல்லா நகரமாகச் சென்னையை மாற்றலாம்" எனப் பேசினார். சாலை விபத்துகளைக் குறைப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியதை மேற்கோள்காட்டிப் பேசிய ஆணையர், உச்ச நீதிமன்றம் கூட சாலை பாதுகாப்பில் தமிழ்நாடு மாநிலம் சிறந்த முறையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.