சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு (செப்டம்பர் 16) சென்னை வந்தடைந்தார்.
அப்போது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் அவரை வரவேற்றனர்.
மேலும், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, சட்டம்-ஒழுங்கு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் வி.என். ரவியை வரவேற்றனர்.
இந்த நிலையில் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக இன்று பதவியேற்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் உள்ள மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்துவைக்கிறார். இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.
ஆர்.என். ரவி கடந்துவந்த பாதை
1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அலுவலராகப் பணியைத் தொடங்கிய ஆர்.என். ரவி, அம்மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். ஒன்றிய அரசின் உளவுப் பிரிவு சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி 2012ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஆர்.என். ரவி பத்திரிகைத் துறையிலும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இதன் பிறகே காவல் பணியில் சேர்ந்தார். மத்திய புலனாய்வுப் பிரிவில் இவர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதேபோல், உளவுத் துறையில் பணியாற்றிய காலகட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு எதிராக இவரது பங்களிப்பு இன்றியமையாதது. அதன்படி, அங்குள்ள பிரிவினைவாத, தீவிரவாத குழுக்களை பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி நிலைக்குத் திரும்ப வித்திட்டார்.
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்புத் துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அஜித் தோவலுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் குட்புக்கில் இடம்பிடித்தவர்.
2019 ஆகஸ்ட் 1ஆம் தேதிமுதல் 2021 செப்டம்பர் 15 வரை நாகலாந்து மாநில ஆளுநராகப் பதவி வகித்துவந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி