சென்னை: தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று (செப்.18) காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்றார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், புதிய ஆளுநருக்கும், அவரது மனைவிக்கும் புத்தகம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் வாழ்த்து
பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்தார். இவ்விழாவில், தலைமைச் செயலர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
புதிய ஆளுநருக்கு வாழ்த்து
மேலும், பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆர்.என். ரவிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சஞ்ஜிப் பானர்ஜி, உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஆர்.என். ரவிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
இதையும் படிங்க: சண்டிகர் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்