சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஜெபமணி ஜனதா கட்சி என்ற தனி கட்சியை நிறுவி தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். விருப்ப ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான இவர், இம்முறை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்து மதிப்பாக ரூ.1.76 ஆயிரம் கோடி இருப்பதாகவும், கொடநாடு எஸ்டேட்டில் 600 ஏக்கரில் நிலம் இருப்பதாகவும், உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு பரிசீலனையில் இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், இவருக்கு வேட்பாளர் அடையாள அட்டையையும் வழங்கியது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு மோகன்ராஜ் அளித்த பிரத்யேக பேட்டியில், “நான் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவலும் பொய்யானது தான். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற பொய்யான தகவலை பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டேன்” என்றார்.
சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துதான் கட்சிகள் போட்டியிடுகின்றன என்று மக்கள் உணர வேண்டும். காசு, பணம் , பொய் வாக்குறுதிகளை மயங்காமல் நல்ல வேட்பாளரை தங்களது வாக்கு என்னும் கடுமையான ஆயுதத்தை முறையாக பயன்படுத்தினால் ஜனநாயகம் செழித்து வளரும், நல்லவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்கிறார்.
மேலும் இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.