சென்னை: எம்.டி, எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின் போது, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியக் கூடிய அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, 30 விழுக்காடு ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படுவதை எதிர்த்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயின்று வரும் அரசுசாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 11 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கில், கடந்த 4 ஆண்டுகளாக 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 30 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதனால் தங்களுக்கு முதுநிலை மருத்துவப்படிப்பில், உரிய இடங்கள் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அல்லது, ஊக்க மதிப்பெண் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: முதுநிலை மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு