சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கன மழையால் பெரும்பாலான சாலைகள் மழை நீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மாநகராட்சி ஊழியர்களுடன் காவல் துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் கனமழை அறிவிப்பையொட்டி, சென்னை காவல் துறையில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்காக 10 குழுக்களை அமைத்துள்ளனர்.
இந்தக் குழுக்களில் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த அனுபவம் மிக்க காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்தக் குழுக்களுக்கு தேவையான உபகரணங்கள் மரம் அறுக்கும் ரம்பம், மழை நீர் அடைப்பை அகற்றவதற்கான கருவிகள், வெள்ளத்திலிருந்து மக்களை மீட்க தேவையான சிறிய படகு உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கினார்.
இந்த மீட்பு குழுவினர் சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மழைநீர் அகற்றும் பணி மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளனர்