தமிழ்நாட்டில் கரோனா தாக்கத்தால் வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் பல்வகை வாகன ஓட்டுநர்கள். குறிப்பாக, வங்கிகளில் வட்டிக்கு என லட்சக்கணக்கில் கடன்களைப் பெற்று கார் ஓட்டுபவர்கள் ஏராளம். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்கள், ஐ.டி, தனியார் நிறுவன பணியாளர்கள் தான்.
![மன உளைச்சலில் உயிரிழந்த வாகன ஓட்டுநர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-special-story-of-car-drivers-live-like-corpses-without-livelihood-40-suicide-7204894_23072020153933_2307f_1595498973_804.jpg)
இது தவிர பல வகை தனியார் நிறுவனங்களும் கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தன. இப்படி வருமானம் ஈட்டி வந்த இவர்கள் வாழ்வை பதம் பார்த்தது, கரோனாவிற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு. வாடகை கார் ஓட்டுநர்கள் சென்னையில் அதிகபட்சமாக எட்டாயிரம் பேர் வரை இருக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களாக வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது தவிக்கின்றனர் இவர்கள்.
அதோடு காருக்காக வாங்கியக் வங்கிக் கடனை செலுத்த வங்கிகள் நிர்பந்திப்பதும், தவறினால் காரை பறிமுதல் செய்வோம் என மிரட்டுவதும் அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மறுபுறம் வங்கிக் கடன் அச்சுறுத்தல் என்றால், ஊரடங்கு தளர்வின்போது இ-பாஸ் பெற்று வண்டியை இயக்க பாஸும் கிடைப்பதில்லை என்று புலம்புகின்றனர்.
![நடைபிணம் போல் ஆனது எங்கள் வாழ்வு - வாகன ஓட்டுநர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8149659_269_8149659_1595562620925.png)
நாட்கள் ஆக ஆக வீட்டில் உணவுக்கே வழியின்றி, தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியற்று இருப்பதாகவும் கலங்குகின்றனர் கார் ஓட்டுநர்கள். மேலும், இந்த மன உளைச்சலால், 40 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
நடை பிணங்களை போல் உணவின்றி வாழ்கிறோம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிணம் போல் வேடமிட்டு போராடிய ஓட்டுநர்கள், ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், சலூன் கடைகள் என பலரையும் போல், தங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கடந்த நான்கு மாத வாகனக் கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களை பால் முகவர்களாக நியமித்த ஆவின் நிறுவனம்!