சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை ஈ.வே.ரா.மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதில் ஈ.வெ.ரா மணியம்மையாரின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், அவரது சிலை அமைந்துள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்குப் பின்பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலைக்கு அவரது பெயரை வைத்து பெருமைப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று வேனல்ஸ் சாலையின் பெயரை ஈ.வே.ரா.மணியம்மையார் சாலை என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் அங்கு புதிதாக பதாகையை நிறுவியது. இந்த பதாகையை திராவிட கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.