சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மே 18ஆம் தேதி முதல் ரெமிடெசிவிர் மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், நேரு உள் விளையாட்டரங்கில் மருந்து விற்கப்படாது என காவல்துறை அறிவித்தது.
இதனால் இரவிலிருந்து காத்திருந்த மக்கள் மருந்து வழங்க வேண்டுமெனச் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்கு அதிகளவில் மக்கள் கூடியதால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு விற்பனையைத் தமிழ்நாடு அரசு மாற்றியது.
ஒரு நாளைக்கு 300 நபர்களுக்கு மட்டுமே மருந்து விற்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக அங்கு கூடினர். இதனால், தகுந்த இடைவெளி பின்பற்றமுடியாத சூழல் நிலவியது. மேலும், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்கும் என சுகாதாரத் துறை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நேரு உள் விளையாட்டரங்கில் இனி ரெமிடெசிவிர் மருந்து விற்கப்படாது எனக் காவல்துறை அறிவித்தது.
இப்படியான அறிவிப்புகள் அரசின் தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவிலிருந்தே மருந்து வாங்குவதற்காக நேரு விளையாட்டரங்கம் முன்பாக காத்திருந்த மக்கள், மருந்து கிடைக்காது என அறிந்தவுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"மருந்து வேண்டும்" என்ற முழக்கத்துடன் போராடிய அவர்களுடன், காவல் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் நடத்திக் கலைந்து போகச் செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பினை பலப்படுத்திக் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.