சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த ராஜசேகர் மீது சோழவரம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. B-பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகரை கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு குற்ற வழக்கில் விசாரிப்பதற்காக போலீசார் நேற்றுமுன் தினம் (ஜூன் 12) கொடுங்கையூர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜன், முதலமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற நிலையில், சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் இந்த வழக்கை விசாரித்ததாகத் தெரிகிறது. விசாரணையின்போது, ராஜசேகர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்க்கூராய்வுக்காக வைக்கப்பட்டது. முன்னதாக, விசாரணையின்போது உடல் நிலை பாதிக்கப்பட்ட ராஜசேகரை, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் நேற்றிரவு முழுவதும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினர். மரணம் பிரிவு 176-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொடுங்கையூர் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன் மற்றும் முதல் நிலை காவலர் சத்திய மூர்த்தி ஆகிய 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கெல்லீஸ் சிறார் 12வது நீதிமன்ற நடுவர் லட்சுமி, எவரெடி காலனி போலீஸ் பூத், கொடுங்கையூர் காவல்நிலையத்திலுள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். உயிரிழந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தினார். இந்நிலையில் மரணமடைந்த விசாரணை கைதி ராஜசேகரின் உடல் வைக்கப்பட்ட ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் லட்சுமி விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கை, சிபிசிஐடி விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பரிந்துரைத்துள்ள நிலையில், விரைவில் சிபிசிஐடி தரப்பு விசாரணையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று (ஜூன்13) ராஜசேகரின் உடலை அவரது குடும்பத்தார் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். தனது மகன் 'ராஜசேகருக்கு எவ்விதமான நோயும் இல்லாத நிலையில், வலிப்பு வந்து அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல' என ராஜசேகரின் தாய் உஷா தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ராஜசேகரின் உடலை வாங்க மாட்டோம் எனவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அது வரை உடலை வாங்க மாட்டோம் என மறுத்து ராஜசேகரன் குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக்கைதி மரணம் - சென்னை காவல் ஆணையர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!