தமிழகத்தில் மின் வாரியத்திற்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால் வருவாய் புலனாய்வு இயக்குநரகத் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்தோனேஷியாவில் இருந்து அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளதாகக் கூறி, மனுதாரர் தரப்பில் பல ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனச் சுட்டிக்காட்டிய அரசு தலைமை வழக்கறிஞர், தற்போது நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகளை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக போதுமான ஆவணங்கள் இல்லாததால் அரைவேக்காட்டுத் தனமாக உத்தரவை பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
மேலும், நிலக்கரி இறக்குமதியில் ஏதோ தவறு உள்ளது என்பதை உணர்வதாக கூறிய நீதிபதிகள், மனுதாரர் வசம் உள்ள ஆவணங்களை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து, முறைகேட்டை நிரூபிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: காவல் துறையினரின் வாக்கி டாக்கி மாயம்!