சென்னை: பன்னாட்டு விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விமான நிலைய ஆணையரக இயக்குநர் சரத்குமார் செய்தியாளரிடம் கூறியதாவது,
“ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பன்னாட்டுப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 700 பேர் வரை தகுந்த இடைவெளியுடன் அமரக்கூடிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ராபிட் சோதனை செய்ய கட்டணம் மூன்றாயிரத்து 400 ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 900 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் 600 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ராபிட் சோதனை முடிவு 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆர்டி-பிசிஆர் சோதனை நேர முடிவு ஆறு மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து வந்த ஐந்தாயிரத்து 816 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை.
ஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குச் சோதனை கட்டாயம் என்ற பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நாடு நீக்கப்பட்டுள்ளது. டெல்டா தொற்றைவிட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பன்னாட்டுப் பயணிகளிடம் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
விமான நிலையத்திற்கு அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து வரக்கூடிய பயணிகள் பரிசோதனை நேரம், கட்டணங்களை இணையதளத்தில் செலுத்தி வசதி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முறையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்திய விமான நிலைய ஆணையரக வழிக்காட்டுதல் முறையில்தான் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விமான நிலையத்தில் தற்போது முனையங்களாகச் செயல்படுகின்றன. விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்தபின் பெயர்ப் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒமைக்ரானை ஒழிக்க வேப்ப மரத்திற்குத் திருமணம் செய்துவைத்த கிராம மக்கள்!