சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா இருந்த வரையிலும் அதிரடி அமைச்சரவை மாற்றங்கள் சாதாரணமானவைதான். ஆனால் திமுகவைப் பொறுத்தவரையிலும் இதுபோன்ற அமைச்சரவை மாற்றங்களை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு வர சொல்லியதாக கூறப்படுகிறது.
ஒருமையில் திட்டிய அமைச்சர்: இதனையடுத்து பிடிஓ ராஜேந்திரன் மற்றும் கிராம ஊராட்சிக்கான பிடிஓ அன்புகண்ணன் ஆகியோர் அமைச்சர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ராஜேந்திரனை பார்த்து 'நீ SC (பட்டியல் சமூகம்) பிடிஓ தானே?, நீ சேர்மன் (அதிமுக) பேச்சைக்கேட்டுக் கொண்டுதான் நடப்பாய். நாங்கள் சொல்வதை கேட்பது இல்லை. உன்னை AD-கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன்' என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்?: இந்நிலையில், நேற்று (மார்ச் 28) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கச்சென்ற முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதுகுறித்து கூறினார். மேலும், சம்பவம் குறித்து மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க முகவரி கேட்டுப்பெற்றதோடு அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்கள் பேக்ஸ் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் ஆவணங்களை அனுப்புமாறு கூறியுள்ளனர் என்றும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஏற்கனவே, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ரூ.35 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் மற்றும் சம்பந்தப்பட்ட துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில், தற்போது சாதி ரீதியான பிரச்சனையில் அவர் சிக்கியுள்ளார்.
சைவ, அசைவ சர்ச்சை: இதுமட்டுமின்றி, ஒரு சில நாள்களுக்கு முன் அரசு பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டுமே நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வெளியான அரசாணை சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு அடுத்த நாளே, அந்த அரசாணையை போக்குவரத்து துறை திரும்ப பெற்றதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
போக்குவரத்துறைக்கு பட்டியலின அமைச்சர்: இதனிடையே, அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்துறைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த துறையை கவனித்து வந்த எஸ்.எஸ். சிவசங்கரன் போக்குவரத்துத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.